Thanks to Sri Raghavan Nemili
திருவரங்கத்தில் ஸ்ரீ.நம்பெருமாளின் திருஅத்யயன உற்சவத்தின் இராப்பத்தின் ஏழாம் நாள் இன்று – 12.01.2020.
இன்றைய சிறப்பு மிகு விசேஷங்கள் இரண்டு. ஒன்று பராங்குச நாயகியாக திருஅவதாரம் கொண்டு ஸ்ரீ.நம்மாழ்வார் எழுந்தருளியிருந்தார். அற்புத சாற்றுப்படியில் ஸ்ரீ.நம்மாழ்வார் ஸேவை ஸாதித்தார்.
இரண்டாவது விசேஷம் ஸ்ரீ.நம்பெருமாள் இன்று திருமாமணி மண்டபத்தில் கைத்தல ஸேவை ஸாதித்தார் இந்த ஸேவையும் மிக அற்புத ஸேவையாகும். வருடத்தில் இரண்டு முறை மட்டுமே கைத்தல ஸேவையில் ஸேவை ஸாதிப்பார் ஸ்ரீ.நம்பெருமாள்.
இன்று மாலை 4.00 மணிக்கு பரமபத வாசலிலிருந்து எழுந்தருளிய ஸ்ரீ.நம்பெருமாள் வழக்கப் போல் சந்திர புஷ்கரணி பக்கம், மணல் வெளி பக்கம் வழி நடை உபயங்கள் கண்டருளி, பின்னர் ஆயிரங்கால் மண்டப மணல் வெளியில் புறப்பாடு கண்டருளி , சுமார் மாலை 6.15 மணிக்கு திருமாமணி மண்டபம் எழுந்தருளினார். அங்கு ஆழ்வார்களுக்கும் , ஆச்சாரியர்களுக்கும் ஸேவை ஸாதித்து விட்டு, திருமாமணி மண்டபத்தில் மேல் பகுதியில் எழுந்தருளி, அங்கு கைத்தல ஸேவை ஸாதித்தார்.
பராங்குச நாயகியாக தன்னை வைத்துக் கொண்டு, ஸ்ரீ.நம்மாழ்வார் ஸ்ரீ.ரங்கநாதனைப் பற்றி பதினோரு பாசுரங்கள் திருவாய் மொழியின் ஏழாம் பத்தின் இரண்டாம் திருமொழியில் அருளிச் செய்துள்ளார். அந்தபாசுரங்களின் முதல் பாசுரம்.
“ கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் *
கண்ண நீர் கைகளால் இறைக்கும் *
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் *
தாமரைக் கண் என்றே தளரும் *
எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு என்னும் *
இரு நிலம் கை துழா இருக்கும் *
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் *
இவள் திறத்து என் செய்கின்றாயே * “
என்று தொடங்கி மேலும் பத்து பாசுரங்களை ஸாதித்துள்ளார்.
ஆக இன்று இங்கு கூடிய பத்தர்களுக்கு அற்புத ஸேவை ஸ்ரீ.நம்பெருமாளாலும், ஸ்ரீ.நம்மாழ்வாராலும் அருளப்பட்டு, அவற்றை அருமையாக ஸேவிக்கும் பாக்கியம் பெற்றனர் இன்று குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பத்தர்கள்.